Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Saturday, July 30, 2011

நொக்கியா தனது நீண்ட கால இடத்தினை இழந்தது

கையடக்கத் தொலைபேசி சந்தையில் 1990 ஆம் ஆண்டு முதல் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடித்திருந்த நொக்கியா முதற்தடவையாக அப்பிளிடம் தனது இடத்தினை இழந்தது. கடந்த பல மாதங்களாக நொக்கியா தனது சந்தையினை சிறிது சிறிதாக இழந்து வந்தது. அந்நிறுவனத்தின் அறிக்கைகளின் படி 2011 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் தனது விற்பனை 34% குறைந்துள்ளதாகவும் 16.7 மில்லியன் கையடக்கத்தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் அப்பிள் 20 மில்லியன் ஐ போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நொக்கியாவிற்கு பாரிய அடியாகும். மேலும் தென்கொரிய நிறுவனமான செம்சுங் நொக்கியாவை முந்தும் நிலையில் உள்ளதாகவும் அதன் அறிக்கை வெளியாகும் போது அதன் நிலை இதைவிட சிக்கலாகுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் நொக்கியாவின் சந்தைப் பங்கானது 38 வீதத்திலிருந்து 28 வீதமாக வீழ்ச்சியடைந்தது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்பிள் மற்றும் கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினைக்கொண்டியங்கும் கையடக்கத்தொலைபேசிகளும் சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றமை பிரதான காரணமாகும். இதனோடு நொக்கியா இன்று வரை தனது 'சிம்பியன்' இயக்குதளத்தினை கொண்டியங்குவதே அதன் தோல்விக்கான மற்றுமொரு பிரதான காரணமாகும். இதனைத் தவிர்க்கவே நொக்கியா விண்டோஸ் உடன் கைகோர்ப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் கையடக்கத் தொலைபேசிச் சந்தை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் நொக்கியா தனது இடத்தினை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது. சீன நிறுவனமான 'ZTE' மற்றும் 'RIM' இன் பிளக்பெரி ஆகியவையும் குறிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றமை நொக்கியாவிற்கு மேலும் சவாலாளிப்பதாகவுள்ளது. நொக்கியா வெகுவிரைவில் புதிய இயக்குதளத்தினை உபயோகிப்பதுடன் பல முன்மாதிரியான கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்காவிடில் சந்தையில் காணாமல் போகும் நிலை வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.

Tuesday, July 26, 2011

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புப் பணி இந்திய ஆதரவுடன் ஆரம்பம்

வடபகுதியிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைக்கும் பணிகள் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்படுகின்றது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைக்கவுள்ளார். காங்கேசன்துறை துறைமுகத்தில் போர்க் காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட பல கப்பல்களின் சிதைவுகள் கடலுக்கு அடியில் காணப்படுவதால் துறைமுகத்துக்குக் கப்பல்கள் வந்து செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. துறைமுகப் புனரமைப்புப் பணியின் முதலாவது கட்டமாக மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை மீ்ட்கும் பணியில் இந்தியாவின் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும், இதற்கு சில மாதங்கள் செல்லலாம் எனவும் தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான பிரதான துறைமுகமாக காங்சேன்துறை துறைமுகத்தைப் புனரமைப்பதற்கான பணிகளை இந்தியா மேற்கொள்ளும். இதேவேளையில், பலாலி விமானத் தளத்தைப் புனரமைப்பதற்கான பணிகளையும் இந்தியா பொறுப்பேற்றுள்ளது. விமான ஓடுபாதையும், விமானத் தளமும் இந்திய நிபுணர்களின் மேற்பார்வையில் புனரமைக்கப்படவிருக்கின்றது.

Tuesday, July 12, 2011

கார்த்திகேசு சிவத்தம்பி

கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 19070 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், 1976 முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 2011, July 6 புதன்கிழமை இரவு 8 .15 மணிக்கு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார்.