Tuesday, July 6, 2010
தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!
உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .
இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.
'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.
'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.
இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.