Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, November 24, 2010

உருளைக்கிழங்கை விண்ணில் செலுத்தி இங்கிலாந்து சாதனை

அமெரிக்காவின் ‘டிஸ்கவரி’ விண்கலம் திட்டமிட்டபடி புறப்படுவது மிக அரிது. கிளம்பும் நேரத்தில் எரிபொருள் டேங்க் சரியில்லை என்பார்கள். வெளியில் ஓடு கழன்று விழுந்துவிட்டது என்பார்கள். நாலைந்து நாள் கவுன்ட் டவுன் முடியப்போகும் நேரத்தில் விண்கல இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு இறங்கிவிடுவார்கள். இங்கிலாந்தில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்கள் டேவன் கவுன்டியின் ஆஷ்பர்டன் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளி குழந்தைகள். குடித்துவிட்டு தூர தூக்கிப்போட்ட பழைய பிளாஸ்டிக் பாட்டில், ஒரு உருளைக்கிழங்கு, ஹீலியம் நிரப்பப்பட்ட அழுத்தமான பலூன்.. நூல் போட்டு கட்டினார்கள். காட்சிகளை பதிவு செய்ய ஒரு மினி கேமரா. எங்கே தரையிறங்குகிறது என கண்டுபிடிக்க ஜிபிஎஸ் கருவி. விறுவிறுவென ரெடியானது விண்கலம். குழந்தைகளாயிற்றே. உருளைக்கிழங்குக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல மேக்கப் போட்டார்கள். வெள்ளை தாடி, மீசை, சிவப்பு தொப்பி.. ஜம்மென்று ரெடியாகிவிட்டார் சான்டாகிளாஸ் டிரைவர். பிளாஸ்டிக் பாட்டிலில் ‘அவரை’ வசதியாக உட்கார வைத்தார்கள். பள்ளிக்கு அருகே உள்ள பூங்காதான் ஏவுதளம். ‘‘லாஞ்ச் பண்ணலாமா மிஸ்’’ என்றனர் கோரசாக. ‘‘ஓகே கண்ணுகளா’’ மிஸ் பச்சைக்கொடி அசைக்க.. பலூனை பறக்கவிட்டது மழலைப் பட்டாளம். ‘ஸ்புட்னிக்&2’ என்று பெயரிடப்பட்ட ‘விண்கலம்’ மெதுவாக உயரே கிளம்பத் தொடங்கியது. கைதட்டியும் உற்சாக குரல் எழுப்பியும் விடைகொடுத்து அனுப்பின குழந்தைகள். நூறு, இருநூறு அல்ல.. 90 ஆயிரம் அடி உயரம் (சுமார் 27 கி.மீ.) வரை சீராக பறந்தது. பலூன் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. டமார். தயாராய் விரிந்தது பாராசூட். கிறிஸ்துமஸ் தாத்தாவின் பாட்டில் விண்கலம் மெல்ல இறங்கத் தொடங்கியது. காற்றின் போக்கில் பறந்து 225 கி.மீ. தொலைவில் உள்ள ஹாம்ப்ஷயர் நகரில் தரையிறங்கியது. ஜிபிஎஸ் உதவியுடன் மிக துல்லியமாக விண்கலத்தை கண்டுபிடித்தனர் குழந்தைகள். விண்ணில் அது எடுத்த புகைப்படங்களை ஆச்சரியப்பட்டு ரசித்தனர். தங்களது ‘விளையாட்டு’ சிறப்பாக முடிந்ததில் அவர்களுக்கு அபரிமிதமான குஷி. சவாலான விஷயத்தை சர்வசாதாரணமாக சாதித்திருக்கும் வாண்டுகளை இங்கிலாந்தே பாராட்டுகிறது.