Friday, December 31, 2010
பனிக்காலத்தில் உடலை பாதுகாப்பது எப்படி?
மார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. சூரிய ஒளி குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்றுக் குறைவாகவே இருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக 'வைரஸ்' நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும்.
இந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொண்டையில் டான்ஸில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. இன்னும் இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா ஜூரம், ஒற்றைத் தலைவலி ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. அதோடு இந்த மாதிரியான பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகி விடுகிறது.
காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் ஜூரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன.
சரி, நம் உடலை எப்படி பாதுகாப்பது?
1. நல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள்.
2. வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிக்கவும்.
3. பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளுங்கள்.
4. மூக்கை கைகுட்டையால் மூடிக் கொள்ளுங்கள்.
5. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
6. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாயைத் திறந்து பேசிக்கொண்டே வண்டி ஓட்டாதீர்கள்.
7. தும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், மூக்கிலிருந்து வடியும் நீரிலும் அதிக அளவு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவை உடனே அருகில் இருக்கும் நபர்களைத் தாக்கி பரவும். மற்றவர்கள் நலன் கருதி, கைகுட்டை, கைதுண்டு இல்லாமல் இருக்காதீர்கள்.
பொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
கம்பளியினாலான கையுறை அணியுங்கள். மாலை ஆனதும் காலுறை அணியுங்கள். சற்று இறுக்கமான ஆடைகள் அணிந்துக் கொள்ளுங்கள்.
மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள்.
பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
பன், பிரெட் போன்ற பேக்கரி ஐட்டங்களையும், சுவீட்களையும் வாங்கிய அன்றே உண்ண வேண்டும். இல்லையெனில் அதன் மேல் உருவாகும் பூஞ்சக்காளான்களால் வாந்தி, பேதி உண்டாகும்.
பொதுவாக பனிக்காலத்தில் தோல் வறண்டு விடும்.
உதடுகள் வெடிக்காமலிருக்க வெண்ணெய், நெய், கிளிசரின், பாலேடு, லிப்கார்டு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.
பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தப்படுத்திக் கொள்ள பழக்குங்கள்.
மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 45 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
Labels:
பனிக்காலத்தில்
Tuesday, December 28, 2010
விக்கிலீக்ஸ் உரிமையாளர் வாழ்க்கை வரலாறு ரூ.7.5 கோடிக்கு ஒப்பந்தம்
லண்டன், டிச. 27-
விக்கிலீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் அசேஞ்சின் வாழ்க்கை வரலாறு எழுத ரூ.7.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஜூலியன் அசேஞ் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதில் அதிகப்படியான ரகசியங்கள் அமெரிக்கா சம்பந்தப்பட்டவை. இதனால் அமெரிக்க அரசாங்கம் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளது. அவர் மீது சுவீடன் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் செக்ஸ் புகார் அளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட இங்கிலாந்து நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அசேஞ் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க பதிப்பாளர், இங்கிலாந்து பதிப்பாளர் உள்பட உலகின் பல பகுதிகளில் இருந்தும் அவருக்கு சுமார் 7.5 கோடி வரை கிடைக்கும்.
"இந்த புத்தகத்தை எழுத நான் விரும்பவில்லை. ஆனால், நான் எழுதியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளேன். என் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நான் 1.5 கோடி ரூபாய் வரை செலவழித்து விட்டேன். மேலும் என் வழக்கு செலவுக்கும், விக்கிலீக்ஸ் இணையதளம் மூழ்காமல் காப்பாற்றவும் பணம் தேவைப்படுகிறது. ஆகவே இந்த புத்தகத்தை எழுத ஒப்புக்கொண்டேன்" என்று அசேஞ் கூறினார்.
Labels:
விக்கிலீக்ஸ்
Sunday, December 12, 2010
மணம் வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா?
இலுப்பைப் பூ:
இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.
ஆவாரம்பூ:
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.
அகத்திப்பூ:
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.
நெல்லிப்பூ:
நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
மகிழம்பூ:
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.
தாழம்பூ:
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.
செம்பருத்திப்பூ:
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
ரோஜாப்பூ:
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.
வேப்பம்பூ:
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.
முருங்கைப்பூ:
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.
மல்லிகைப்பூ:
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
கருஞ்செம்பைபூ:
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.
குங்குமப்பூ:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.
Labels:
மலர்களுக்குள்
Sunday, December 5, 2010
இலங்கையில் கடும் மழை
இலங்கை,
நீரேந்து பிரதேசங்களில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியில் 17 மாவட்டங்களில் 13 நாட்களுக்கு மேலாக பெய்துவருகின்ற அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டதில் மூன்று பேர் பலியானதுடன் எட்டுபேர் படுகாயமடைந்துள்ளனர். அனர்த்தங்களினால் 20,944 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயற்கை அனர்த்தங்களினால் 1,685 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 268 வீடுகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 2640 குடும்பங்களை சேர்ந்த 4,702 பேர் 45 அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு ஏற்படும் மற்றும் வெள்ளம் தேங்கிநிற்கக்கூடிய தாழ்நிலங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களும் இடம்பெயருமாறும் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் அம்பாந்தோட்டை, குருணாகல், கண்டி, புத்தளம், மொனராகலை, கேகாலை, நுவரெலியா, கம்பஹா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுமேயே இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
கண்டி கட்டுகஸ்தோட்டையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 70 வயது மதிக்கதக்க மூதாட்டி பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை இனிகல எனுமிடத்திலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை வெலிமடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு ஒருவர் பலியானதுடன், அவரின் சடலத்தைத் தேடும் பணியில் கடற்படையினர் படைவீரர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, மின்னல் தாக்கத்தினால் மாத்தறை முலாலியன எனுமிடத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ள அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கினால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 244 குடும்பங்களைச் சேர்ந்த 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 880 வீடுகள் சேதமடைந்துள்ளன பாதிக்கப்பட்டவர்களில் 423 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குருணாக்கல் மாவட்டத்தில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 265 வீடுகள் சேதமடைந்துள்ளன 75 வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 69 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. புத்தளத்தில் 1786 பேரும், நுவரெலியாவில் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், கம்பஹாவில் 9685 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் மன்னார் மாவட்டத்தில் 7998 குடும்பங்களை சேர்ந்த 33778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 101 வீடுகளும் சேதமடைந்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 358 பேரும் யாழ்ப்பாணத்தில் 3180 குடும்பங்களை சேர்ந்த 10820 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3330 குடும்பங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 8 பேரும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 1120 குடும்பங்களை சேர்ந்த 3688 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அதேவேளை மலைப்பாங்கான பிரதேசங்களில் ஆங்காங்கே பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. தலைநகரில் அவ்வப்போது பெய்கின்ற அடைமழையினால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதுடன், பலமணிநேரத்திற்கு பெரும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன.
பாலங்கள் உடைந்தன
பிரதான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் ஆற்றங்கரைகள் நீரினால் அரித்துச் செல்லப்படுவதுடன் அமைக்கப்பட்டிருந்த பாலங்களும் உடைந்து விழுந்துள்ளன.
மாவத்தேகம திக் ஓயா பெருக்கெடுத்தமையினால் வளாத்துப்பிட்டிக்குச் செல்வதற்கான மூன்று பாலங்களும் உடைந்துவிட்டதாக மாவத்÷தகம பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
வீதிகளும் புதையுண்டன
மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவருகின்ற மழையினால் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கொழும்புபதுளை பிரதான வீதியில் லஹா எனுமிடத்தில் வீதி ஒன்றரை அடிக்கு நிலத்திற்குள் புதையுண்டுள்ளது.
அந்த வீதியில் பாரம் கூடிய வாகனங்கள் பயணிப்பதற்குத் தடைவிதித்துள்ள பொலிஸார் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வான் கதவுகள் திறப்பு
நீர்த்தேக்கங்கள், குளங்களின் நீர்மட்டம் சில மணிநேரத்திற்குள் வெகுவாக உயர்ந்தமையினால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தானாகவே திறந்துகொண்டன. விக்டோரியா, லக்ஷ்பான மற்றும் காசல் ரீ ஆகிய நீர்தேங்களில் சில கதவுகளும் அநுராதபுர காலாவௌ குளத்தின் வான்கதவுகளுமே இவ்வாறு திறந்துகொண்டன.
கலாவெவ குளத்தின் அணைக்கட்டில் 30 வான்கதவுகள் இருப்பதுடன் அதில் 11 கதவுகள் திறந்திருக்கின்றன இதனால் ஒரு நிமிடத்திற்கு 44 ஆயிரம் கனமீற்றர் நீர் வெளியேறுகின்றது.
520 மீற்றர் நீளமும் கொண்ட 215 மீற்றர் அகலமும் விக்டோரியா அணைக்கட்டில் 1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னியக்க வான்கதவுகள் திறந்துகொண்டுள்ளன. அந்த கதவுகளிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 7600 கனமீற்றர் நீர் வெளியேறுகின்றது. அதேபோல காசல் ரீ, லக்ஷபான ஆகிய நீர்த்தேக்கங்களின் தன்னியக்க வான்கதவுகள் சில திறந்துகொண்டன.
ஆற்றுப்படுக்கையில் இருப்போருக்கு எச்சரிக்கை
வான்கதவுகள் தானாகவே திறந்துகொண்டமையினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் பன்மடங்கு பெருக்கெடுத்துள்ளது. நீரேந்தும் பகுதிகளில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் பலத்தமழை பெய்கின்றமையினால் நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் மேலதிக நீர் வழிந்தோடும் ஆற்றுப்படுக்கைகளுக்கு அணித்தாக இருப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மலையகத்தில் கடும் குளிர்
கார்த்திகை மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலான காலப்பகுதியில் மலையகத்தில் பனி பொழிவதுடன் பகல்வேளையிலும் குளிர்ந்திருக்கும். ஆனால், தொடர்ச்சியாக பெய்கின்ற மழையினால் கடுமையான குளிர் நிலைமை காணப்படுகின்றது.
ரயில் போக்குவரத்து சீர்குலைவு
மண்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் உள்ளிட்ட பல பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசல் நிலைமை அவ்வப்போது ஏற்படுவதுடன் சில மாவட்டங்களில் போக்குவரத்து முற்றாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றது. இஹல கோட்டைக்கும் ரம்புக்கனைக்கும் இடையிலான தண்டவாளத்தில் பாரிய கற்கள் விழுந்தமையினால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் சீர்குலைந்துள்ளன.
நாவலப்பிட்டிக்கும் பதுளைக்கும் இடையிலான தண்டவாளங்களிலும் ஆங்காங்கே பாராங்கற்கள் விழுந்துள்ளதுடன், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அவற்றை அகற்றி தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ரயில்வே திணைக்களம், சீர்குலைந்துள்ள ரயில் சேவைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளது.
வன்னி வெள்ளக்காடாக காட்சி
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவினராலும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் முரசுமோட்டை மகா வித்தியாலயம், பரந்தன் இந்து மகா வித்தியாலயம், பூநரி ஞானிமம், ஸ்கந்த புரம் ஆகிய பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார்.
அதுமட்டுமன்றி கண்டாவளை,ஜெயபுரம்,பூநகரி, அக்கராயன் ஆகிய இடங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அக்கராயன்குளம் வான்கதவு திறக்கப்பட்டதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
இந்தப்பகுதியில் வீதியை மூடிய நிலையில் சுமார் 5 ஆடி உயரத்திற்கு வெள்ளம் பாய்கின்றது கண்டாவளை பரந்தன் வீதியில் ஏழு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன். முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட முறிகண்டி,றெட்பானா, வற்றாப்பளை,கரைச்சிக்குடியிருப்பு மற்றும் கரும்புள்ளியான போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஆனையிறவிற்கும் தட்டுவன்கொட்டிற்கும் அதனோடு இணைந்த பிரசேங்களுக்குமான போக்குவரத்து முற்றாகவே துண்டிக்கப்பட்டுள்ளது. தட்டுவன்கொட்டிப் பிரதேசத்துக்கான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதனால் அங்கு சிக்குண்ட 90 குடுங்களை சேர்ந்தவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை படகுமூலமான போக்குவரத்து வசதிகளை செய்துகொடுப்பதற்கு கரைச்சி கடற்றொழிலாளர்கள் சங்கங்களில் சமாஜம் முயற்சியெடுத்துள்ளது.
போக்குவரத்து மட்டுமன்றி தட்டுவன்கொட்டிக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மக்கள் மழை நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கான குடிநீர் இயக்கச்சியிலிருந்து நீலத்தடி நீர் விநியோகத்தின் மூலமாக வழங்கப்பட்டது பின்னர் நீர்க்கொள்கலன்கள் வழங்கப்பட்டன. போக்குவரத்து தடைப்பட்டமையினால் மக்கள் மழைநீரை சேமித்து பயன்படுத்தி வருகின்றனர்.
பனிமூட்டம்
மழைபெய்கின்ற வேளைகளில் மலையகத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் வீதிகளில் பனிமூட்டம் சூழ்ந்துகொண்டிருப்பதனால் சாரதிகள் பகல் வேளையிலும் முன்விளக்களை ஒளிரவிட்டவாறு வாகனத்தைச் செலுத்தவேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனார்.
மலையகத்தில் நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களிலேயே பனிமூட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் வாகனத்தைச் செலுத்தாமல் இருப்பது நல்லது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது நிலவுகின்ற மிகமோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதனால், நாடு முழுவதும் மழைபெய்யும் என்றும் சிற்சில இடங்களில் மழைவீழ்ச்சியின் அளவு குறைவடையும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பிலும் நிலைகொண்டிருக்கும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மிகமோசமான காலநிலை நீடித்திருக்கின்ற காலத்தில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எதிர்வு கூறியுள்ள வானிலை அவதான நிலையம் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துகொள்ளும் வகையில் இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தாது முன்கூட்டியே ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Saturday, December 4, 2010
குற்றவாளியாக்கும் "கோவம்"
கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம்.
இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
இயந்திர கதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!
நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக' எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லாதவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்துவிட முடியும்.
சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்துகொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்ப்படுத்துவது புத்திசாலித்தனம்.
நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.
"வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.
கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.
கோபப்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும்போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது.
கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.
எனவே கோவத்தை விட்டொழித்து சாந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள், உலகம் உங்கள் காலடியில் சுழலும். வாழ்க்கை தித்திப்பாகும்.
Thursday, December 2, 2010
வெள்ளக்காடாகும் கொழும்பு நகரம்
இலங்கையில் தற்போது பெய்துவரும் அடைமழையால் அனேகமாக இடங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தும் இந்நலுற்றும் உள்ளனர்.
கொழும்பு நகரமே நாறிப்போய் இருக்கின்றது. எங்கும் குன்றும் குழிகள். இதில் குறிப்பிடத்தக்கதொரு அம்சம் என்னவென்றால் அண்மைக்காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட புதிய புதிய பாதைகள் எல்லாம் பள்ளமும் திட்டியுமாக காட்சியளிக்கின்றமேயே!. அதிகாரிகள் இவற்றை கவனிக்க வேண்டும்.
நகரிலேயே தேவைக்கதிகமான கட்டப்பட்ட கட்டடங்கள் வடிகாலமைப்புகளுக்கு மேலாக சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் இவ்வாறான இடங்களை மெல்ல மெல்ல அகற்றிவருகின்றமை வரவேற்கத்தக்கது.
Labels:
கொழும்பு நகரம்
மட். கல்லடி வாவியில் ஆயிரக்கணக்கில் நீந்துவது பாம்புகள் அல்ல! ஒருவகை மீன்களே!
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக்கொண்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவை பாம்புகள் அல்லவென தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒருவகை மீனினங்கள் என ம்டடக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பதில் இணைபாளர் அலி மெஹமது மெஹமட் காசீம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இவை அவதானிக்கப்பட்டதாகவும் இன்றைய தினமும் அவை அவதானிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விலாங்கு மீன் என்ற இனத்தை சேர்ந்த இந்த மீன்கள் தமது வாழ்க்கையை தொடருவதற்காக ஆறுகளில் இருந்து கடலுக்கு செல்வதையே தற்போது அவதானிக்ககூடியதாக உள்ளது.
பலரும் இது பாம்புகள் எனக்கூறுவதுடன் சுனாமி வருவதற்கான எச்சரிக்கையாகவே இந்த பாம்புகள் நீந்துவதாகவும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தனர்.
எனினும் அனர்த்த முகாமைத்துவ மததிய நிலையம் அனர்த்தங்கள் தொடர்பாக எந்த நேரத்திலும் தகவல்களை வழங்கும் என தெரிவித்துள்ள அலி மட்டக்களப்பு வாவியில் நீந்துவதாக கூறப்படும் பாம்புகளை போன்ற மீனினத்தை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Labels:
மட்டக்களப்பு