Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, December 5, 2010

இலங்கையில் கடும் மழை

இலங்கை, நீரேந்து பிரதேசங்களில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியில் 17 மாவட்டங்களில் 13 நாட்களுக்கு மேலாக பெய்துவருகின்ற அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டதில் மூன்று பேர் பலியானதுடன் எட்டுபேர் படுகாயமடைந்துள்ளனர். அனர்த்தங்களினால் 20,944 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை அனர்த்தங்களினால் 1,685 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 268 வீடுகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 2640 குடும்பங்களை சேர்ந்த 4,702 பேர் 45 அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு ஏற்படும் மற்றும் வெள்ளம் தேங்கிநிற்கக்கூடிய தாழ்நிலங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களும் இடம்பெயருமாறும் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் அம்பாந்தோட்டை, குருணாகல், கண்டி, புத்தளம், மொனராகலை, கேகாலை, நுவரெலியா, கம்பஹா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுமேயே இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. கண்டி கட்டுகஸ்தோட்டையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 70 வயது மதிக்கதக்க மூதாட்டி பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை இனிகல எனுமிடத்திலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை வெலிமடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு ஒருவர் பலியானதுடன், அவரின் சடலத்தைத் தேடும் பணியில் கடற்படையினர் படைவீரர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை, மின்னல் தாக்கத்தினால் மாத்தறை முலாலியன எனுமிடத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ள அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு நால்வர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கினால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 244 குடும்பங்களைச் சேர்ந்த 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 880 வீடுகள் சேதமடைந்துள்ளன பாதிக்கப்பட்டவர்களில் 423 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குருணாக்கல் மாவட்டத்தில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 265 வீடுகள் சேதமடைந்துள்ளன 75 வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 69 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. புத்தளத்தில் 1786 பேரும், நுவரெலியாவில் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், கம்பஹாவில் 9685 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் மன்னார் மாவட்டத்தில் 7998 குடும்பங்களை சேர்ந்த 33778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 101 வீடுகளும் சேதமடைந்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 358 பேரும் யாழ்ப்பாணத்தில் 3180 குடும்பங்களை சேர்ந்த 10820 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3330 குடும்பங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 8 பேரும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 1120 குடும்பங்களை சேர்ந்த 3688 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அதேவேளை மலைப்பாங்கான பிரதேசங்களில் ஆங்காங்கே பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. தலைநகரில் அவ்வப்போது பெய்கின்ற அடைமழையினால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதுடன், பலமணிநேரத்திற்கு பெரும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன. பாலங்கள் உடைந்தன பிரதான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் ஆற்றங்கரைகள் நீரினால் அரித்துச் செல்லப்படுவதுடன் அமைக்கப்பட்டிருந்த பாலங்களும் உடைந்து விழுந்துள்ளன. மாவத்தேகம திக் ஓயா பெருக்கெடுத்தமையினால் வளாத்துப்பிட்டிக்குச் செல்வதற்கான மூன்று பாலங்களும் உடைந்துவிட்டதாக மாவத்÷தகம பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. வீதிகளும் புதையுண்டன மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவருகின்ற மழையினால் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கொழும்புபதுளை பிரதான வீதியில் லஹா எனுமிடத்தில் வீதி ஒன்றரை அடிக்கு நிலத்திற்குள் புதையுண்டுள்ளது. அந்த வீதியில் பாரம் கூடிய வாகனங்கள் பயணிப்பதற்குத் தடைவிதித்துள்ள பொலிஸார் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். வான் கதவுகள் திறப்பு நீர்த்தேக்கங்கள், குளங்களின் நீர்மட்டம் சில மணிநேரத்திற்குள் வெகுவாக உயர்ந்தமையினால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தானாகவே திறந்துகொண்டன. விக்டோரியா, லக்ஷ்பான மற்றும் காசல் ரீ ஆகிய நீர்தேங்களில் சில கதவுகளும் அநுராதபுர காலாவௌ குளத்தின் வான்கதவுகளுமே இவ்வாறு திறந்துகொண்டன. கலாவெவ குளத்தின் அணைக்கட்டில் 30 வான்கதவுகள் இருப்பதுடன் அதில் 11 கதவுகள் திறந்திருக்கின்றன இதனால் ஒரு நிமிடத்திற்கு 44 ஆயிரம் கனமீற்றர் நீர் வெளியேறுகின்றது. 520 மீற்றர் நீளமும் கொண்ட 215 மீற்றர் அகலமும் விக்டோரியா அணைக்கட்டில் 1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னியக்க வான்கதவுகள் திறந்துகொண்டுள்ளன. அந்த கதவுகளிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 7600 கனமீற்றர் நீர் வெளியேறுகின்றது. அதேபோல காசல் ரீ, லக்ஷபான ஆகிய நீர்த்தேக்கங்களின் தன்னியக்க வான்கதவுகள் சில திறந்துகொண்டன. ஆற்றுப்படுக்கையில் இருப்போருக்கு எச்சரிக்கை வான்கதவுகள் தானாகவே திறந்துகொண்டமையினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் பன்மடங்கு பெருக்கெடுத்துள்ளது. நீரேந்தும் பகுதிகளில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் பலத்தமழை பெய்கின்றமையினால் நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் மேலதிக நீர் வழிந்தோடும் ஆற்றுப்படுக்கைகளுக்கு அணித்தாக இருப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலையகத்தில் கடும் குளிர் கார்த்திகை மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலான காலப்பகுதியில் மலையகத்தில் பனி பொழிவதுடன் பகல்வேளையிலும் குளிர்ந்திருக்கும். ஆனால், தொடர்ச்சியாக பெய்கின்ற மழையினால் கடுமையான குளிர் நிலைமை காணப்படுகின்றது. ரயில் போக்குவரத்து சீர்குலைவு மண்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் உள்ளிட்ட பல பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசல் நிலைமை அவ்வப்போது ஏற்படுவதுடன் சில மாவட்டங்களில் போக்குவரத்து முற்றாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றது. இஹல கோட்டைக்கும் ரம்புக்கனைக்கும் இடையிலான தண்டவாளத்தில் பாரிய கற்கள் விழுந்தமையினால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் சீர்குலைந்துள்ளன. நாவலப்பிட்டிக்கும் பதுளைக்கும் இடையிலான தண்டவாளங்களிலும் ஆங்காங்கே பாராங்கற்கள் விழுந்துள்ளதுடன், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அவற்றை அகற்றி தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ரயில்வே திணைக்களம், சீர்குலைந்துள்ள ரயில் சேவைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளது. வன்னி வெள்ளக்காடாக காட்சி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவினராலும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் முரசுமோட்டை மகா வித்தியாலயம், பரந்தன் இந்து மகா வித்தியாலயம், பூநரி ஞானிமம், ஸ்கந்த புரம் ஆகிய பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார். அதுமட்டுமன்றி கண்டாவளை,ஜெயபுரம்,பூநகரி, அக்கராயன் ஆகிய இடங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அக்கராயன்குளம் வான்கதவு திறக்கப்பட்டதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் வீதியை மூடிய நிலையில் சுமார் 5 ஆடி உயரத்திற்கு வெள்ளம் பாய்கின்றது கண்டாவளை பரந்தன் வீதியில் ஏழு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன். முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட முறிகண்டி,றெட்பானா, வற்றாப்பளை,கரைச்சிக்குடியிருப்பு மற்றும் கரும்புள்ளியான போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை ஆனையிறவிற்கும் தட்டுவன்கொட்டிற்கும் அதனோடு இணைந்த பிரசேங்களுக்குமான போக்குவரத்து முற்றாகவே துண்டிக்கப்பட்டுள்ளது. தட்டுவன்கொட்டிப் பிரதேசத்துக்கான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதனால் அங்கு சிக்குண்ட 90 குடுங்களை சேர்ந்தவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை படகுமூலமான போக்குவரத்து வசதிகளை செய்துகொடுப்பதற்கு கரைச்சி கடற்றொழிலாளர்கள் சங்கங்களில் சமாஜம் முயற்சியெடுத்துள்ளது. போக்குவரத்து மட்டுமன்றி தட்டுவன்கொட்டிக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மக்கள் மழை நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கான குடிநீர் இயக்கச்சியிலிருந்து நீலத்தடி நீர் விநியோகத்தின் மூலமாக வழங்கப்பட்டது பின்னர் நீர்க்கொள்கலன்கள் வழங்கப்பட்டன. போக்குவரத்து தடைப்பட்டமையினால் மக்கள் மழைநீரை சேமித்து பயன்படுத்தி வருகின்றனர். பனிமூட்டம் மழைபெய்கின்ற வேளைகளில் மலையகத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் வீதிகளில் பனிமூட்டம் சூழ்ந்துகொண்டிருப்பதனால் சாரதிகள் பகல் வேளையிலும் முன்விளக்களை ஒளிரவிட்டவாறு வாகனத்தைச் செலுத்தவேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனார். மலையகத்தில் நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களிலேயே பனிமூட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் வாகனத்தைச் செலுத்தாமல் இருப்பது நல்லது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் நாட்டில் தற்போது நிலவுகின்ற மிகமோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதனால், நாடு முழுவதும் மழைபெய்யும் என்றும் சிற்சில இடங்களில் மழைவீழ்ச்சியின் அளவு குறைவடையும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பிலும் நிலைகொண்டிருக்கும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. மிகமோசமான காலநிலை நீடித்திருக்கின்ற காலத்தில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எதிர்வு கூறியுள்ள வானிலை அவதான நிலையம் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துகொள்ளும் வகையில் இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தாது முன்கூட்டியே ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.