Monday, February 7, 2011
சீரற்ற காலநிலை தொடர்கிறது
கிழக்கு மற்றும் வடமத்திய போன்ற மாகாணங்களில் பெய்து வந்த அடை மழை குறைந்துள்ள போதிலும் சீரற்ற காலநிலை தொடர்கின்றது.
இதன் பிரகாரம் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் வேளை முதல் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பொலனறுவை மற்றும் அநுராதபுர போன்ற மாவட்டங்களிலும் மழை குறைந்துள்ள போதிலும் இம் மாவட்டங்களில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை தொடர்வதால் இம் மாவட்டங்களில் இடையிடையே காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கின்றது.
மேற்படி மாவட்டங்களின் நகர் புறங்களில் வெள்ள நீர் வடிந்தோடிய போதிலும் தாழ்நிலப் பிரதேசங்களில் சுமார் இரண்டு அடிக்கும் குறையாமல் நீர் தேங்கி நிற்கின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 21487 குடும்பங்களைச் சேர்ந்த 78973 பேர் 177 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். அருமைநாயகம் தெரிவித்தார்.
அத்துடன் 36762 குடும்பங்களைச் சேர்ந்த 146,107 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவினர், நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ள 78973 பேருக்கும் அந்த பிரதேச செயலாளர்களின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்படுவதோடு, ஏனையோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் கோறளைப்பற்று வடக்கு வாகரையில் 09 நலன்புரி நிலையங்களில் 1879 குடும்பங்களைச் சேர்ந்த 6319 பேரும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடியில் 16 நலன்புரி நிலையங்களில் 2107 குடும்பங்களைச் சேர்ந்த 7788 பேரும், கோறளைப்பற்று வாழைச்சேனையில் 07 நலன்புரி நிலையங்களில் 2612 குடும்பங்களைச் சேர்ந்த 8965 பேரும், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை மத்தியில் 09 நலன்புரி நிலையங்களில் 1492 குடும்பங்களைச் சேர்ந்த 5792 பேரும், கோறளைப்பற்று தெற்கு கிரானில் 16 நலன்புரி நிலையங்களில் 1513 குடும்பங்களைச் சேர்ந்த 5827 பேரும், ஏறாவூர்பற்று செங்கலடியில் 24 நலன்புரி நிலையங்களில் 3361 குடும்பங்களைச் சேர்ந்த 11824 பேரும், ஏறாவூர் நகரில் 04 நலன்புரி நிலையங்களில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 1112 பேரும், மண்முனை மேற்கு வவுணதீவில் 20 நலன்புரி நிலையங்களில் 1612 குடும்பங்களைச் சேர்ந்த 5847 பேரும், மண்முனை வடக்கு மட்டக்களப்பில் 22 நலன்புரி நிலையங்களில் 1215 குடும்பங்களைச் சேர்ந்த 4319 பேரும், காத்தான்குடியில் 06 நலன்புரி நிலையங்களில் 948 குடும்பங்களைச் சேர்ந்த 3965 பேரும், மண்முனைப்பற்று ஆரையம்பதியில் 11 நலன்புரி நிலையங்களில் 1641 குடும்பங்களைச் சேர்ந்த 6380 பேரும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பகுதியில் 08 நலன்புரி நிலையங்களில் 1162 குடும்பங்களைச் சேர்ந்த 4663 பேரும், மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடியில் 08 நலன்புரி நிலையங்களில் 525 குடும்பங்களைச் சேர்ந்த 1897 பேரும், போரதீவுப் பற்று வெல்லாவெளியில் 17 நலன்புரி நிலையங்களில் 1128 குடும்பங்களைச் சேர்நத் 4275 பேர் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண குளங்களின் அண்மையில் நிலவிய வெள்ள அனர்த்தம் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்த வண்ணம் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் ஒரு அடி அளவில் வெள்ளம் நேற்றைய தினம் வடிந்துள்ளதாகவும் மழை பெய்யாவிடில் வெள்ளம் படிப்படியாக வடிந்து இயல்பு நிலை ஏற்படலாமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
வெள்ளம் வடிந்து விடுமாயின் போக்குவரத்து சீரடைந்து விடுமென தெரிவித்த அரசாங்க அதிபர் காலநிலை அடிக்கடி மாறுதல் அடைவதாகவும் குறிப்பிட்டார்.