Tuesday, March 1, 2011
கிபீர் விமானங்கள் இரண்டு நேருக்குநேர் மோதி விபத்து
கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கிபீர் விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானப்படையின் அறுபதாவது நிறைவையொட்டி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான கிபீர் ஜெட் விமானங்கள் இரண்டே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் விபத்தில் சிக்கிய விமானிகள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகுறது. இதேவேளை சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பில் உருவானவை கிபீர் விமானங்கள். ஆரம்பகாலங்களில் இஸ்ரேலிய தொழில்நுட்பவியலாளர்கள் தயாரிப்புகளுக்கு அதிகமான பங்களிப்பு செய்திருந்த போதிலும் பின்னர் அதில் அமெரிக்காவின் ஊடுருவலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கிபீர் போர் விமானங்களை இலங்கை 1995,96 ஆம் ஆண்டுகளில் முதலில் கொள்வனவு செய்தது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உக்கிரகட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் கிபீர் விமானங்கள் படையினரால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு இந்த கிபீர் விமானங்களே உதவின.
இலங்கை விமானப் படையினரிடம் கிபீர் சி2 மற்றும் சி7 ரக விமானங்கள் ஐந்திற்கும் அதிகமாக கையிருப்பில் உள்ளதுடன் மேலதிக இரண்டு விமானங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு விமானத்தின் பெறுமதி சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
Labels:
கிபீர் விமானங்கள்