Sunday, April 24, 2011
சாய்பாபா ஸித்தியடைந்தார்
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.