Friday, July 16, 2010
இந்திய ரூபாய்க்கு புதிய சின்னம் அறிமுகம்
சர்வதேச அங்கிகாரம் பெற்ற நாணயங்களுக்கு குறியீடுகள் இருக்கின்றன. அந்தவகையில் இந்திய ரூபாய்க்கும் புதிய சின்னமொன்றினை இந்திய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி நாடாளுமன்றில் வரவு- செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும்போது சர்வதேச தரத்தின் இந்திய கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இந்திய ரூபாய்க்கு சின்னமொன்றினை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய ரூபாய்க்கு சின்னம் உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. வெற்றிபெறுபவருக்கு இந்திய ரூபாய் 2.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
அதற்கமைய அனுப்பிவைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சின்னங்களை ஐந்துபேர்கொண்ட நடுவர்குழு பரிசீலித்து, அதில் ஐந்து சின்னங்களை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அந்த ஐந்து சின்னங்களிலிருந்து கான்பூரில் ஐஐடி படிக்கும் மாணவர் உதயக்குமார் உருவாக்கிய சின்னத்தினை தேர்வுக்குழு தெரிவுசெய்திருக்கிறது. இந்திய மத்திய அரசினால் தெரிவுசெய்யப்பட்ட ரூபாய் சின்னத்தினை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தி உரையாற்றும்போது… இந்திய நாணயத்தின் மதிப்பு சர்வதேச மட்டத்தில் உயர்ந்திருக்கும் இத்தருணத்தில் இந்தச் சின்னம் அறிமுகப்படுத்தியிருப்பது பொருத்தமானதே. இன்றும் ஆறு மாதங்களில் இந்தச் சின்னம் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் ரூபாயினைப் பயன்படுத்திவருகின்றன. சின்னத்தினை உருவாக்கிய உதயக்குமார் குவஹாத்தியிலுள்ள ஐஐடியில் நாளை பேராசிரியராக பணியில் இணைகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
Labels:
இந்திய ரூபாய்