Saturday, November 27, 2010
யாழ். வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் 20 வருடங்களின் பின் மீள்குடியமர்வு
யாழ். மாவட்டம், வலிகாமம் வடக்கில் 20 வருடங்களின் பின்னர் 970 குடும்பங்களைச் சேர்ந்த 3, 448 பேர் தமது சொந்த இடங்களுக்கு நேற்றுத் திரும்பினர்.
இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே அவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர்.
மீள்குடியமர்வு நிகழ்வு காலை 8 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து அப்குதியில் மீளக்குடியமரவேண்டிய குடும்பங்கள் நேற்றுக் காலையே கீரிமலையை வந்தடைந்தனர். எனினும் மீள்குடியேற்ற நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கே இடம்பெற்றது.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா பணமும், சிமெந்தும், கூரைத்தகடுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் விடுவிக்கப்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பகுதியில் மீள்குடியமர்த்தப்படும் மக்கள் கீரிமலை நகுலேஸ்வரா வீதி, சேந்தாங்குளம் வீதி, ஆலடி வீதி ஆகியவற்றைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம். என்று அங்கிருந்த மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்லேஸ்திரி அலன்ரின் உதயன், யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் ஈ.பி.டிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க. கமல், வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ். முரளிதரன், 515 ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதி எல்.ரெந்தேனியா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்றுக் காலை 8 மணியளவில் நிகழ்வு நடைபெறவிருந்த இடத்துக்கு பொது மக்கள் சேந்தாங்குளம் பகுதி ஊடாக பஸ்களில் ஏற்றிவரப்பட்டிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில்,
உங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து 22 வருடங்கள் தற்காலிக இடங்களில் காத்திருந்ததுபோல இங் கும் சுமார் 5 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
மீள்குடியமர்வு தொடர்பான கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டபோது, தமிழ் மக்களின் மீள்குடியமர்வு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து ஒன்றுபட்டு உழைக்கத் தயார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல தடவை கூறியிருந்தோம்.
போர் முடிவுற்ற சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இராணுவப் பிரசன்னம் தேவையில்லை என்பதைப் பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளோம். தொடர்ந்தும் இதனை வலியுறுத்து வோம்.
2006ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். அதன் பிரகாரம் மக்களை வெளியேற்றிவிட்டு இராணுவத்தினர் அப்பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதென்பது சட்டவிரோதமான செயல் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இன்னும் பல பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் முடங்கியுள்ளன. அவற்றினையும் நீக்கி மக்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
போரினால் இழக்கப்பட்ட சொத்துக் களுக்கும், அங்கவீனமானவர்களுக்குமான நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்து குடியமர்த்துவதுதான் உண்மையான மீள்குடியேற்றம். எனவே இன்று இப்பகுதியில் மீள்குடியேறற்றப்படுகின்ற மக்களின் வாழ்வாதாரம் சகல வழிகளிலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
எனவே தமிழ்மக்களின் மனிதாபிமான மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படும் என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
Labels:
வலிகாமம் வடக்கில்