Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, April 13, 2011

வெற்றி கொடு வேல்முருகா: தமிழ் புத்தாண்டு 2011

தமிழ்ப்புத்தாண்டான இன்று, தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை இந்த ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டால் சகல நன்மையும் அடையலாம். * மயில் மீது வலம் முருகப்பெருமானே! வள்ளி தெய்வானை மணாளனே! மனதைக் மயக்கும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே! கந்தப்பெருமானே! இந்த புத்தாண்டு நன்னாளில் நல்வாழ்வு வேண்டி உன் பாதம் பணிகிறேன். * ஞானமே வடிவான ஆறுமுகப்பெருமானே! நீ என் உள்ளத்தில் வீற்றிருக்கின்றாய். அதனால், என் வாயில் இருந்து வரும் சொற்கள் மந்திரம் போல ஆற்றல் மிக்கதாய் இருக்கின்றன. * மலை மீது ஆட்சி செய்யும் முருகா! மலையுச்சிக்கு வந்து உன்னைத் தரிசனம் செய்யும் எங்களுக்கு செல்வவளத்தை தந்து வாழ்விலும் உயர வைப்பாயாக. * மலர்ந்த தாமரை போல் ஆறுமுகங்களைக் கொண்டவனே! பன்னிரு கண்களால் கருணை செய்பவனே! சிவகுமரனே! குகப்பெருமானே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! என் முன்னே வந்து நின்று அருள் புரிவாயாக. * எல்லா உலகங்களையும் ஆணவத்துடன் ஆட்சிசெய்த நீதிக்கு புறம்பானவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவனே! நீயே என் மனதில் குடியிருக்கிறாய். என் எண்ணத்தைத் தூய்மையாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டுவாய். * சக்தியின் புதல்வனான சண்முகனே! என் கண்களில் உன் திருவுருவம் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும். காதுகள் உன் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும். பெருமை மிக்க திருப்புகழை மட்டுமே வாய் பாட வேண்டும். உனக்கு மட்டுமே என் உடல் சேவை செய்ய வேண்டும். * நல்லவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! பக்தி என்றால் என்னதென்று அறியாத பாமரனுக்கும் அருள்புரியும் கருணைக்கடலே! உன்னையன்றி வேறு யாரையும் எனக்கு தெரியாது. என் மனைவி, குழந்தைகள், உறவினர் அனைவரும் நல்வாழ்வு வாழ உன் திருப்பாதம் பணிகிறேன். * தமிழ்க்கடவுளே! தரணி போற்றும் செல்வனே! நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இந்த புத்தாண்டில் எனக்கு அருள் செய்வாயாக. புத்தாண்டு வழிபாட்டில் தமிழ்க்கடவுள் : புத்தாண்டு வழிபாட்டில் தமிழ் முருகனுக்கு தனியிடம் உண்டு. பிரபவ முதல் அட்சய முடிய தமிழ் ஆண்டுகள் அறுபது. இவை சுவாமிமலையில் படிகளாக இருப்பதாக ஐதீகம். இங்கு 60 படிகள் உள்ளன. முருகப்பெருமான் குருவாக வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "குருமலை' என்றும் பெயருண்டு. சுவாமிமலை முருகனுக்கு "சுவாமிநாத சுவாமி' என்பது திருநாமம். சுவாமியாகிய சிவபெருமானுக்கே குருவாக திகழ்வதால் இப்பெயர். குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என்பர். இங்கு முருகப்பெருமானே குருவாக இருப்பதால் குருவருளையும், திருவருளையும் ஒருசேர நமக்கு அருள்புரிகிறார். அறுசுவை உணவு : தமிழ்ப்புத்தாண்டு நாளில் உணவில் அறுசுவையும் இடம்பெற்றிருக்கும். இப்பழக்கம் காலம் காலமாக நம் மண்ணில் பின்பற்றப்படுகிறது. இனிப்புக்காக அதிரசம், காரத்திற்காக காரவடை, புளிப்புக்காக மாங்காய் பச்சடி, உவர்ப்புக்காக முறுக்கு வத்தல், துவர்ப்புக்காக வாழைப்பூ மசியல், கசப்புக்காக வேப்பம்பூ பச்சடி ஆகிய உணவுகள் சாப்பாட்டில் இடம்பெறும். நாணயத்திற்கு இருபக்கங்கள் போல, வாழ்வில் இன்ப துன்பம் என்று இருவித அனுபவம் உண்டு. இனிப்பு வகைகளை மட்டும் சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படும். அல்வா சாப்பிடுபவன் சிறிது மிச்சரையும் சாப்பிடுகிறான். இன்பமும் துன்பமும் கலந்த கலவையாக இருந்தால் வாழ்வில் தேடுதல் உணர்வு இருக்கும். உணவுக்கும், மன உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை உணர்த்துவதற்காகவே, புத்தாண்டின் துவக்கநாளில் அறுசுவையையும் உணவில் இடம்பெறச் செய்தனர். நல்வாழ்வு தரும் பராசக்தி: கரஆண்டின் ராஜாவாக சந்திரன் கிரகம் உள்ளது. சந்திரனுக்குஉரிய அதிதேவதை அம்பிகை. சந்திரமண்டலத்தில் பராசக்தியாகிய அம்பிகையின் உலகமான "சக்திலோகம்' இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அம்பிகையை வணங்கினால் கரஆண்டு முழுவதும் சுபிட்சமான வாழ்வு அமையும். பராசக்தி ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொரு திருநாமத்தோடும் வடிவழகோடும் விளங்குகிறாள். மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அபிராமி, சிவகாமி, காந்திமதி என்று அம்பிகைக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. கர புத்தாண்டு நாளில் அம்மனைத் தரிசித்தால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். சந்திரனுக்குரிய பவுர்ணமி நாளில் விரதமிருந்து அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதும், அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை பாராயணம் செய்வதும் சிறப்பான பலன் தரும்.