Monday, April 4, 2011
மறக்க முடியாத தருணம் * சச்சின் பெருமிதம்
"சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்றது, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம், என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக் கண்டத்தில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இத்தொடரின் பைனலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதித்தது.
இதுகுறித்து இந்தியாவின் சச்சின் கூறியதாவது: சுமார் 28 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்ற தருணத்தை, எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. இதைவிட வேறு எதையும் அடைய விரும்பவில்லை. இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பை வெல்ல காரணமாக இருந்த சக வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்து ஊக்குவித்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், அப்டன் மற்றும் உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.