Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Friday, April 8, 2011

அதிரடி திருவிழா ஆரம்பம்! * மீண்டும் சாதிக்குமா சென்னை கிங்ஸ்

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இன்று ஆரம்பமாகிறது. வீரர்களின் அதிரடி ஆட்டம், நடன மங்கைகளின் கவர்ச்சி ஆட்டம், பாலிவுட் நட்சத்திரங்களின் படையெடுப்பு என போட்டிகள், களை கட்ட உள்ளன. உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் காணப்படும் இந்திய கேப்டன் தோனி, மீண்டும் ஒரு முறை சென்னை அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுத் தர காத்திருக்கிறார். கடந்த 2008ல், 20 ஓவர்கள் கொண்ட ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் துவங்கப்பட்டது. கடந்து கடந்த மூன்று முறை இத்தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இம்முறை நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய புதிய அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 51 நாட்கள் நடக்கும் இத்தொடரில், மொத்தம் 74 போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த மூன்று தொடர்களுடன் வீரர்களுக்கான பழைய ஒப்பந்தம் முடிந்த நிலையில், நான்காவது தொடரில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நட்சத்திர வீரர்கள் தவிர, மற்றவர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறியுள்ளதால், இம்முறை விறுவிறுப்பு அதிகமாகவே இருக்கும். சாதிப்பார் தோனி: நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கு கேப்டன் தோனி தான் முக்கிய காரணம். சமீபத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று தந்த குஷியில் காணப்படுகிறார். இவரது தலைமையில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, சாம்பியன் லீக் "டுவென்டி-20 தொடரிலும் கோப்பையை கைப்பற்றியது. இப்படி வெற்றி கேப்டனாக திகழும் தோனி, இம்முறையும் சாதித்துக் காட்டலாம். சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. அதிரடி ஆட்டத்துக்கு முரளி விஜய், சுரேஷ் ரெய்னா உள்ளனர். உலக கோப்பை பைனலில் சிக்சர் அடித்து இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்த தோனியும் இருக்கிறார். நிலைத்து நின்று ஆட மைக்கேல் ஹசி, பத்ரிநாத் உள்ளனர். "ஆல்-ரவுண்டர் பணியை ஆல்பி மார்கல் கச்சிதமாக செய்வார். புதுவரவான டுவைன் பிராவோ காயத்தில் இருந்து மீளாதது பின்னடைவு. முரளி இல்லை: பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. வீரர்களுக்கான ஏலத்தில் முரளிதரனை கொச்சி அணி கொத்திச் சென்றதால், சுழலுக்கு அஷ்வின் மற்றும் ஜகாதியை நம்ப வேண்டியுள்ளது. வேகத்துக்கு போலிஞ்சர், குலசேகரா உள்ளனர். தோனியின் உத்திகள் கைகொடுத்தால், சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.