Monday, December 12, 2011
62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் ரஜினி
இன்று தனது 62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சுப்பர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன. அவருக்கு எமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து இன்று தமிழகத்தின் சுப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தனது பாதையில் இருந்த தடைகள் அனைத்தையும் வெற்றிப்படிக்கட்டுக்களா மாற்றி இன்று இந்த உயரிய நிலையை அடைந்திருக்கிறார்.
அவர் கடந்து வந்த பாதை...
தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் என தமிழ் நாடே தூக்கி வைத்துக் கொண்டாடும் ரஜினி காந்த்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். சினிமாவிற்காக கே. பாலச்சந்தராலேயே ரஜினி காந்த் என பெயர் மாற்றம் பெற்றார். அதிலிருந்து ரஜினியின் வாழ்க்கையும் மாற்றம் பெற்றது. ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக டிசம்பர் 12 1949 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் பிறந்தார்.
பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். படித்து முடித்ததன் பின்னர் பெங்களூரிலேயே பேருந்து நடத்துனராக வேலை பார்த்துக்கொண்டு மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் தமிழகத்தின் சென்னைக்கு சிவாஜி ராவாக வந்து சேர்ந்தார். திரைப்படக்கல்லூரியில் முறையாக நடிப்புப் பயின்றார்.
இந்நிலையில் பாலச்சந்தரின் ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். இதில் கதவொன்றினைத் திறந்தபடி அறிமுகமானார் ரஜினி. அன்று, தான் திறந்தது திரையுலகின் கதவை என்று பின்னாளில் திரையுலகிற்கு உணர்த்தினார். அறிமுகப் படத்தினைத் தொடர்ந்து சில படங்களில் வில்லனாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். முதன் முதலாக புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் மூலம் தன்னை நாயகனாக நிலைநிறுத்திக்கொண்டார் ரஜினி.
பின் நாட்களில் பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, தில்லு முல்லு என தொடர்ந்து பல படங்கள் தொடராக வெற்றி பெற நட்சத்திர அந்தஸ்துள்ள நாயகனாக தன்னை உயர்த்திக் கொண்டார். இக்காலப்பகுதியில், 16.02.1981 அன்று லதாவுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு பெண் குழந்தைகளுக்கு தந்தை ஆனார்.
தனது மகள்கள் இருவருக்கும் தற்போது திருமணம் முடித்து வைத்து தகப்பன் என்ற தனது பாத்திரத்தின் நிறைவையும் கண்டுள்ளார். ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட ரஜினி காந்த அதனை வெளிப்படுத்தும் வண்ணம் தனது 100 ஆவது படமாக ஸ்ரீ ராகவேந்திரா படத்திலும் 2002ஆம் ஆண்டும் பாபா படத்திலும் விரும்பி நடித்திருந்தார்.
மேலும், ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு பாத யாத்திரையாகவே ஸ்ரீ ராகவேந்திரா கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தொடர்ந்து வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்ற ஜனரஞ்சகமான திரைப்படங்கள் மூலம் ஆறிலிருந்து 60 வயது வரையான அனைத்து ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தன் பக்கம் சாய்த்துக்கொண்டார்.
1990ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வெளியான அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம், முத்து, படையப்பா என வரிசையாக அனைத்துப் படங்களும் பெரும் வசூலுடன் பெரும் சாதனைகள் படைத்தன. 1990ஆம் ஆண்டுக்கு பிறகு தன்னை ஒரு முழு நடிகனாகவும் அதே நேரத்ததில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் பல்வேறு சாதனைகளை சினிமாவில் நிகழ்திக்காட்டினார். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளர், திரைக்கதாசிரியராகவும் சினிமாவில் தன் பன்முகத்தைக் காட்டியுள்ளார்.
தற்போது இவருக்கு தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பல நூறு ரசிகர் மன்றங்களை தோற்றுவிக்குமளவிற்கு இவரது இடம் சினிமாவில் மிகப்பெரியது. குறிப்பாக ஜப்பானில்கூட இவருக்கு ரசிகர் மன்றம் உள்ளது. ஆசியாவிலே ஜெக்கிச்சானுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவராக ரஜினியே கருதப்படுகிறார்.
தமிழ் சினிமாவின் வியாபாரம் இந்தியா தாண்டி பெரியளவில் வருமானம் பெற இவர் ஒரு முக்கிய காரணமாவார். மேலும், ரஜினி தமிழக அரசியலிலும் அவ்வப்போது பெரும் தாக்கம் செலுத்தினார். இவரது படங்களிலும் அரசியல் வாடை சற்று தூக்கலாகவே இருக்கும். இதனாலே இவர் அரசியலுக்கு வருவார் என பலரும் ஆருடம் கூறிவருகின்றனர்.
ஆனால் ரஜினியின் பதில் இன்று வரை வருவேன் ஆனா வரமாட்டேன் என்ற பாணியிலே அமைந்துள்ளது. இதுவரை தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். பிலிம் பெயார், தமிழக அரசு விருது, கலை மாமணி, பத்ம ஸ்ரீ என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
சாதாரணமாக தனது வாழ்க்கையை ஒரு பேருந்து இயக்குநராக ஆரம்பித்து இன்று சுப்பர் ஸ்டாராக உயர்ந்த இவரது வளர்ச்சி பலரையும் கவர்ந்து பலர் தங்களது ரோல் மொடலாக இவரை கொள்ள வழிசெய்தது. இதில் இன்றைய தலைமுறை நடிகர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக தற்போதைய முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவரும் சுப்பர் ஸ்டாரையே ரோல் மொடலாகக் கொண்டுள்ளனர்.
வெற்றி தலைக்கேறாமல் இருக்கும் அரிய வகை மனிதர்களில் இவரும் ஒருவர் என்பதை இன்று வரை நிரூபித்து வருகிறார். தான் இந்நிலைக்கு வர பெரிதும் உதவிய கே. பாலச்சந்தர் மற்றும் ரஜினியின் நெருங்கிய நண்பரான உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற பலருக்கும் இந்நாள் வரை நன்றி கூறி வருகிறார்.
அரசியலுக்குள் நுழையாவிட்டாலும் பலருக்கு அறக்கட்டளைகள் மூலம் விளம்பரம் இன்றி பல உதவிகளை செய்து சினிமா கடந்து நல்ல மனிதராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவ்வாறு தனக்கென தனி வழியமைத்து திரையுலக ஜாம்பவானாகத் திகழும் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 62 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ நாமும் சுப்பர் ஸ்டாரை வாழ்த்துவோம்.
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். உடல் நலமின்றி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ரஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால்தான் 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.
மறுபிறவி எடுத்துள்ள ரஜினியின் பிறந்தநாளை அதீத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார்.
அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார். உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான்.
அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.
ஸ்டைல் மன்னன்
ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது. நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.
உலகளாவிய ரசிகர்கள்
ரஜினி மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அவரை திரைத்துறை என்பதையும் தாண்டி ரசிக்கும் ஏராளமான மக்கள் என்பது தற்போது ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனபோது தான் உண்மையாக அறியமுடிந்தது. அந்த அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது.
அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக பிரசித்தி பெற்ற நாளான 12-12-12 அன்று வருவதை ஒட்டி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட ரஜினி ரசிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
ரஜினிகாந்த்