Monday, July 5, 2010
112 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய கப்பல்
ஆர்.எம்.எஸ்., டைட்டானிக் என்ற பிரிட்டிஷ் பதிவு பெற்ற உல்லாசக் கப்பல், 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது, கடலில் மூழ்கியது. இதில் 1500 பயணிகள் இறந்தனர். 700 பேர் உயிர் தப்பினர். வரலாற்றில் ஒரு சோக முத்திரையை பதித்த இந்த சம்பவம் திரைப்படமாக உருவாகி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பல ஆண்டுகளுக்கு பின், டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடைத்தன. அவை டைட்டானிக் கப்பலின் நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன.
இதேபோல், கடந்த 112 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏரியில் மூழ்கிப்போன ஒரு நீராவிக் கப்பல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, மில்வாகி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், 1991ஆம் ஆண்டு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 300 அடி ஆழத்தில் ஒரு மர்மமான பொருளில் அவர்களின் வலை சிக்கியது. இது, பல ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய ஏதாவது ஒரு கப்பலின் பாகங்களாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, மில்வாகிக்கு தெற்கே 40 மைல் தொலைவில், கடந்த 20 ஆண்டுகளாக மெக்சிகன் ஏரியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஏராளமான ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர். ஆழ்கடலில் ஆய்வு செய்யும் தொழில் நுட்பத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மிகப்பெரிய நீராவிக் கப்பலான எல்.ஆர்.டோடி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சிக்கி நீரில் மூழ்கிய சம்பவம் மீண்டும் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஜிட்கா ஹனகோவா தலைமையில் நீரில் மூழ்கும் குழுவிடம் இந்த நீராவிக் கப்பல் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன கப்பல்களில் மிகப்பெரியது இது என இக்குழுவினர் கண்டுபிடித்தனர்.