Tuesday, November 30, 2010
இ-மெயில் சேவையைத் தொடங்கியது "பேஸ்புக்'
சான்பிரான்சிஸ்கோ : சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழும் "பேஸ்புக்' நிறுவனம், புதிதாக இ-மெயில் சேவையை தொடங்கியுள்ளது. "பேஸ்புக்' சமூக வலைத்தளம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வலைத்தளத்தில், தற்போது, 50 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், "பேஸ்புக்' நிறுவனம் புதிதாக "இ-மெயில்' சேவையிலும் நுழைந்துள்ளது. " மெயில் @பேஸ்புக்.காம்' என்ற முகவரியில் இ-மெயில் சேவையை, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகேர்பெர்க் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பேஸ்புக் நிறுவனம் தற்போது, இ-மெயில் சேவையிலும் நுழைந்துள்ளது. பேஸ்புக் வலைதளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற இ-மெயில் தளங்களில் உள்ள பல்வேறு வசதிகளும் இதில் கிடைக்கும். "ஸ்பாம்' மெயில்கள் இதில் வடிகட்டி அனுப்பப்படுவது இதில் சிறப்பம்சம் ஆகும். இணையதளம் பயன்படுத்திவரும், இளைய தலைமுறையினரிடையே இது மிகுந்த வரவேற்பை பெரும். பேஸ்புக்கின் இ-மெயில் சேவையால், ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் சேவைகளுக்கும் பாதிப்பு வரும் என்பதை என்னால், ஏற்க முடியாது. அவற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ, யாருக்கும் போட்டியாகவோ இதனை தொடங்கவில்லை. ஒருவேளை, ஜிமெயில், யாகூ மெயிலில் உள்ள எனது இ-மெயில் அக்கவுண்டைத்தான் நான் முடித்துக்கொள்ள முடியும். இவ்வாறு மார்க் ஜுகேர்பெர்க் கூறினார்.
Saturday, November 27, 2010
யாழ். வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் 20 வருடங்களின் பின் மீள்குடியமர்வு
யாழ். மாவட்டம், வலிகாமம் வடக்கில் 20 வருடங்களின் பின்னர் 970 குடும்பங்களைச் சேர்ந்த 3, 448 பேர் தமது சொந்த இடங்களுக்கு நேற்றுத் திரும்பினர்.
இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே அவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர்.
மீள்குடியமர்வு நிகழ்வு காலை 8 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து அப்குதியில் மீளக்குடியமரவேண்டிய குடும்பங்கள் நேற்றுக் காலையே கீரிமலையை வந்தடைந்தனர். எனினும் மீள்குடியேற்ற நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கே இடம்பெற்றது.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா பணமும், சிமெந்தும், கூரைத்தகடுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் விடுவிக்கப்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பகுதியில் மீள்குடியமர்த்தப்படும் மக்கள் கீரிமலை நகுலேஸ்வரா வீதி, சேந்தாங்குளம் வீதி, ஆலடி வீதி ஆகியவற்றைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம். என்று அங்கிருந்த மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்லேஸ்திரி அலன்ரின் உதயன், யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் ஈ.பி.டிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க. கமல், வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ். முரளிதரன், 515 ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதி எல்.ரெந்தேனியா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்றுக் காலை 8 மணியளவில் நிகழ்வு நடைபெறவிருந்த இடத்துக்கு பொது மக்கள் சேந்தாங்குளம் பகுதி ஊடாக பஸ்களில் ஏற்றிவரப்பட்டிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில்,
உங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து 22 வருடங்கள் தற்காலிக இடங்களில் காத்திருந்ததுபோல இங் கும் சுமார் 5 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
மீள்குடியமர்வு தொடர்பான கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டபோது, தமிழ் மக்களின் மீள்குடியமர்வு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து ஒன்றுபட்டு உழைக்கத் தயார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல தடவை கூறியிருந்தோம்.
போர் முடிவுற்ற சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இராணுவப் பிரசன்னம் தேவையில்லை என்பதைப் பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளோம். தொடர்ந்தும் இதனை வலியுறுத்து வோம்.
2006ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். அதன் பிரகாரம் மக்களை வெளியேற்றிவிட்டு இராணுவத்தினர் அப்பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதென்பது சட்டவிரோதமான செயல் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இன்னும் பல பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் முடங்கியுள்ளன. அவற்றினையும் நீக்கி மக்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
போரினால் இழக்கப்பட்ட சொத்துக் களுக்கும், அங்கவீனமானவர்களுக்குமான நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்து குடியமர்த்துவதுதான் உண்மையான மீள்குடியேற்றம். எனவே இன்று இப்பகுதியில் மீள்குடியேறற்றப்படுகின்ற மக்களின் வாழ்வாதாரம் சகல வழிகளிலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
எனவே தமிழ்மக்களின் மனிதாபிமான மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படும் என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
Labels:
வலிகாமம் வடக்கில்
யாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை
யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணற்காடு - குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று 10 அரை அடி நீளமான வாலைக்குலையொன்றை ஈர்ந்துள்ளது.
கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் சாதாரணமாகவே இக்குலை காணப்பட்டது. ஆனால் பின்னர் குலையின் அளவு நீண்டு வ்ரத் தொடங்கியது.
எனினும் விவசாயி யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாட்களும் இவ்வதிசயத்தை மறைத்து வைத்திருந்தார்.
தற்போதும் இக்குலை தொடாச்சியாக நீண்டு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்கள் இவ்வதிசயத்தை அறிந்து நேரில் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.
Labels:
அதிசய வாழைக்குலை
Friday, November 26, 2010
விலங்குகளுக்காக குரல்கொடுக்கும் இந்திய அழகிகள்
அனைத்து விலங்குகளிடமும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்திய அழகிகள் மூன்று பேர் புதிய பீட்டா விளம்பரத்தில் வலியுறுத்துகின்றனர். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக பீப்பள ஃபார் த எத்திகல் டிரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பீட்டா) ஒரு புத்திம் புதிய விளம்பரத்தில் மூன்று இந்திய அழகிகள் (உலக இந்திய அழகி, புவி இந்திய அழகி மற்றும் சர்வதேச இந்திய அழகி) கண்ணை கவரும் சிவப்பு கவுன்கள் அணிந்து இரக்கம் அழகானது, விலங்குகளுக்காக பேசுங்கள் என்ற வசாகத்துக்கு அருகில் போஸ் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து உலக இந்திய அழகி மானஸ்வி மாம்கய் கூறுகையில் விலங்குகளின் தேவதைகளாக நாம் இருக்க நம் அனைவரையும் விலங்குகள் சார்ந்துள்ளன. சிறிதளவு இரக்க செயல் கூட அவைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பிராணிகளிடம் நாம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். பிராணிகளை யார் கொடுமைப்படுத்தினாலும் அதுபற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
புவி இந்திய அழகியான நிகோல் பரியா கூறுகையில் இதர விலங்குகளை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதன்மூலம் மறைமுகமாக நமக்கு நாமே உதவுகிறோம் என்று கூறுகிறார்.
சர்வதேச இந்திய அழகி நேஹா ஹிங்கே கூறுகையில் உளவியல் மற்றும் குற்றவியல் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், விலங்குகளிடம் கொடூரமான செயல்களில் ஈடுபடுவர்கள் அதோடு நிற்பதில்லை; அவர்களில் பலர் சக மனிதர்களுக்கு எதிரான வன்முறை செயல்களில் இறங்குகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க சைக்யாட்ரிக் கூட்டமைப்பு விலங்குகளை கொடுமைப்படுத்துவதை நடத்தை கோளாறுகளுக்கான ஒரு நோய் கண்டறியும் தகுதிவரம்பாக அடையாளம் கண்டுள்ளது. யு.எஸ்., புலனாய்வு அமைப்பு சந்தேகிக்கப்படும் மற்றும் கிரிமனல்கள் என்று அறியப்பட்டவர்களின் அச்சுறுத்தலை பகுத்தாராய விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய அறிக்கையை பயன்படுத்துகிறது. டென்னிஸ் ராடர், டைலன் கிலிபோல்ட், எரிக் ஹாரிஸ், ஆண்ட்ரூ கனானன் மற்றும் வீரப்பன் போன்ற கொலையாளிகள் விலங்குகளுக்கு வேண்டுமென்றே தீங்கிழைப்பது மூலமே தங்களது கொடூரத்தை தொடங்கினர். நீங்கள் குரல் எழுப்பி, சரியானவற்றுக்காக போராடுங்கள் மற்றும் விலங்குகளுக்கு கொடுமை இழைப்பதற்கு எதிராக கருத்து தெரிவியுங்கள். ஆதரவு, எதுவும், இல்லாத அவைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் பூமியில் அமைதி தொடங்குகிறது என்று நிறைவு செய்கிறார்.
Labels:
இந்திய அழகிகள்
Thursday, November 25, 2010
இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.
தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் "ஈ" எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் "ஈ" எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.
இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் "ஈ" உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி., போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள், முளை கட்டிய பருப்புகள்.
இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால், இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான "ஒமேகா 3" வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.
உடலில் கொழுப்பு சேர விடாமல், "ஒமேகா 3" தடுக்கிறது. எனவே, வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.
இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில், "பாலி பெனோல்ஸ்" என்ற இதயத்திற்கு நன்மை செய்யும், "ஆன்டி ஆக்ஸிடென்ட்" அதிகமாக இருக்கிறதாம்.
டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.
அதிக உப்புத்திறன் கொண்ட "அஜினமோட்டோ", சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. உணவு உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கொண்டு உணவு தயாரிக்கவும்.
எப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.
Labels:
இதய நோய்களிலிருந்து...
Wednesday, November 24, 2010
உருளைக்கிழங்கை விண்ணில் செலுத்தி இங்கிலாந்து சாதனை
அமெரிக்காவின் ‘டிஸ்கவரி’ விண்கலம் திட்டமிட்டபடி புறப்படுவது மிக அரிது. கிளம்பும் நேரத்தில் எரிபொருள் டேங்க் சரியில்லை என்பார்கள். வெளியில் ஓடு கழன்று விழுந்துவிட்டது என்பார்கள். நாலைந்து நாள் கவுன்ட் டவுன் முடியப்போகும் நேரத்தில் விண்கல இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு இறங்கிவிடுவார்கள்.
இங்கிலாந்தில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்கள் டேவன் கவுன்டியின் ஆஷ்பர்டன் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளி குழந்தைகள்.
குடித்துவிட்டு தூர தூக்கிப்போட்ட பழைய பிளாஸ்டிக் பாட்டில், ஒரு உருளைக்கிழங்கு, ஹீலியம் நிரப்பப்பட்ட அழுத்தமான பலூன்.. நூல் போட்டு கட்டினார்கள். காட்சிகளை பதிவு செய்ய ஒரு மினி கேமரா. எங்கே தரையிறங்குகிறது என கண்டுபிடிக்க ஜிபிஎஸ் கருவி. விறுவிறுவென ரெடியானது விண்கலம்.
குழந்தைகளாயிற்றே. உருளைக்கிழங்குக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல மேக்கப் போட்டார்கள். வெள்ளை தாடி, மீசை, சிவப்பு தொப்பி.. ஜம்மென்று ரெடியாகிவிட்டார் சான்டாகிளாஸ் டிரைவர்.
பிளாஸ்டிக் பாட்டிலில் ‘அவரை’ வசதியாக உட்கார வைத்தார்கள். பள்ளிக்கு அருகே உள்ள பூங்காதான் ஏவுதளம். ‘‘லாஞ்ச் பண்ணலாமா மிஸ்’’ என்றனர் கோரசாக. ‘‘ஓகே கண்ணுகளா’’ மிஸ் பச்சைக்கொடி அசைக்க.. பலூனை பறக்கவிட்டது மழலைப் பட்டாளம்.
‘ஸ்புட்னிக்&2’ என்று பெயரிடப்பட்ட ‘விண்கலம்’ மெதுவாக உயரே கிளம்பத் தொடங்கியது. கைதட்டியும் உற்சாக குரல் எழுப்பியும் விடைகொடுத்து அனுப்பின குழந்தைகள்.
நூறு, இருநூறு அல்ல.. 90 ஆயிரம் அடி உயரம் (சுமார் 27 கி.மீ.) வரை சீராக பறந்தது. பலூன் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. டமார். தயாராய் விரிந்தது பாராசூட். கிறிஸ்துமஸ் தாத்தாவின் பாட்டில் விண்கலம் மெல்ல இறங்கத் தொடங்கியது. காற்றின் போக்கில் பறந்து 225 கி.மீ. தொலைவில் உள்ள ஹாம்ப்ஷயர் நகரில் தரையிறங்கியது. ஜிபிஎஸ் உதவியுடன் மிக துல்லியமாக விண்கலத்தை கண்டுபிடித்தனர் குழந்தைகள். விண்ணில் அது எடுத்த புகைப்படங்களை ஆச்சரியப்பட்டு ரசித்தனர்.
தங்களது ‘விளையாட்டு’ சிறப்பாக முடிந்ததில் அவர்களுக்கு அபரிமிதமான குஷி. சவாலான விஷயத்தை சர்வசாதாரணமாக சாதித்திருக்கும் வாண்டுகளை இங்கிலாந்தே பாராட்டுகிறது.
Wi - Fi
ஒய்-ஃபை ( Wi - Fi : கம்பியில்லாத் தொடர்பு ) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அப்போது ஒய்-ஃபை(Wi - Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது எனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மொபைல் போன்களின் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.