Thursday, March 17, 2011
பேராபத்தை விளைவிக்கும் அளவுக்கு ஜப்பானில் அணுக்கதிர் வீச்சு அதிகரிப்பு
ஜப்பானின் புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு உலைகள் வெடித்துச் சிதறியதை அடுத்து, மக்களுக்குப் பேராபத்து விளைவிக்கும் அளவுக்கு அணுக்கதிர்வீச்சின் அளவு அதிகரித்திருக்கிறது என பிரதமர் நவோட்டோகான் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் கடந்த 11ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம், ஆழிப்பேரலை ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது அணுக்கதிர்வீச்சு அபாயம் அதிகரித்து வருகிறது.தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீற்றர் வடகிழக்கில் அமைந்துள்ள புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், ஆறு அணுமின் உலைகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒன்றாம் எண் உலை கடந்த 12 ஆம் திகதியும், மூன்றாம் எண் உலை 14ஆம் திகதியும் வெடித்தன.
2ஆம் உலை வெடிப்பு:
கடந்த 14ஆம் திகதி இரவு, இரண்டாம் எண் உலையில், குளிரூட்டும் முறைகள் தோல்வியடைந்தன. தொடர்ந்து "கோர்" எனப்படும் யுரேனியக் கம்பிகள் உருகின என செய்திகள் வெளியாகின. இத்தகவலை ஜப்பானிய அதிகாரிகள் மறுக்கவில்லை. ஜப்பான் நேரப்படி, செவ்வாய்க் கிழமை காலை 6.10 மணிக்கு இரண்டாம் எண் உலை வெடித்துச் சிதறியது. இதில், உலையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள முதல் நிலைச் சுற்றுச் சுவர் சேதமடைந்தது.
4ஆம் உலையில் திடீர் தீ:
இதற்கிடையில் செவ்வாய்க் கிழமை காலை ஜப்பான் நேரப்படி 9.40 மணியளவில், நான் காம் எண் உலையில் திடீரென தீப்பிடித்தது. பல மாதங்களுக்கு முன்னரே பராமரிப்புக்காக அந்த உலை மூடப்பட்டிருந்தது. ஆனால், உலையிலிருந்த "கோர்" கம்பிகள், அங்கிருந்து அகற்றப்படாமல், நீரில் மூழ்கியிருக்கும்படி வைக்கப்பட்டிருந்தன. தீ விபத்து குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் கூறுகையில்,"கோர் கம்பிகளைச் சுற்றியிருந்த நீர் வற்றியிருக்கக் கூடும். அதனால் உலைக்குள் வெப்பம் அதிகரித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். இச்சம்பவம் மற்ற மூன்றில் நடந்திருப்பதை விட பேராபத்தை விளைவிக்கக் கூடியது'' என்று கூறினர்.
இதையடுத்து, டாய் இச்சியைச் சுற்றி 30 கி.மீற்றர் வட்டாரத்தில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படியும், அந்த வட்டாரத்தில் வெளியேறாமல் உள்ள ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல், ஜன்னல்கள், கதவுகள் ஆகியவற்றை மூடிக்கொள்ளும்படியும், ஏசி பயன்படுத்த வேண்டாம் எனவும் அரசு அறிவித்தது.
டாய் இச்சி நிலையத்தில் பணியாற்றும் 800 ஊழியர்களும் ஏற்கனவே, அந்த வட்டாரத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர். உலைகளுக்குள் கடல் நீரைச் செலுத்தி வெப்பத்தைக் குறைக்கும் பணியில் தற்போது 50 பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் எச்சரிக்கை:
அடுத்தடுத்து அணுஉலைகள் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் நவோட்டோ கான், கதிர்வீச்சு குறித்து மக்கள் பீதி அடையவேண்டாம். அதே நேரம், டாய் இச்சியிலிருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டு பரவி வருகிறது. இந்தக் கசிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.
Labels:
ஜப்பானில் அணுக்கதிர் வீச்சு