Friday, March 25, 2011
தண்ணீர், கீரை எல்லாவற்றிலும் கதிர்வீச்சு பாதிப்பு அபாயம்
டோக்கியோ:ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குடிநீர் குழாய்களில் கலந்துள்ளதால், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் பாட்டில்களுக்கு ஜப்பானில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளுக்கும் தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம், நீரை உட்செலுத்தி குளிரூட்டும் முறைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், அணு உலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் கதிர்வீச்சு, 240 கி.மீ., தெற்கில் உள்ள டோக்கியோ நகரம் வரை பரவியுள்ளது. குழந்தைகளுக்கான எச்சரிக்கை அளவை விட குடிநீரில் இரண்டு மடங்கு கதிர்வீச்சு அயோடின் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, குழாயில் வரும் குடிநீரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என, எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, பல நகரங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் கேபிள்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள், அதிகப்படியான கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
கீரை உள்ளிட்ட காய்கறிகளிலும் கதிர்வீச்சு கலந்திருப்பதால், பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்ய நாடுகள் தடை விதித்துள்ளன.
Labels:
ஜப்பானின் புக்குஷிமா